விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை…. விஜய் தரப்பு விளக்கம்!!

எஸ்.ஏ சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது என்று விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது.

பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். எனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் அவருக்கு விருப்பமில்லை.. விஜய் மக்கள் இயக்கத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கூறிய நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அதில் சேர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது பெயரை பயன்படுத்தி கட்சி கூட்டங்களை நடத்தவும், தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும், அந்த இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது சென்னை  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்..

இதனை தொடர்ந்து இயக்கப் பொதுச்செயலாளர், பொருளாளர்களான அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், மற்றும் தாய் ஷோபா ஆகியோருக்கு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..

அதில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் மன்றத்தை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தில் இருந்து பொறுப்பாளர்கள் அனைவரும் விலகி விட்டனர்.. விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை. அந்த இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. மேலும் நாங்கள் விஜய் ரசிகர்களாக தொடர்வதாக பதில் மனுவில் விளக்கமளித்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் நடிகர் விஜய் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தநிலையில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது. தனது தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என்று விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக எஸ்ஏசி பதில் மனு தாக்கல் செய்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *