கடந்த 2018-ல் டைரக்டர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிய படம் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தற்போது ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து உள்ளார். “புரொடக்ஷன்-5” என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

அதோடு இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் மலேசிய நாட்டின் வட மேற்கு பகுதியிலுள்ள ஈப்போ எனும் மாநகரில் நடந்து வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படப்பிடிப்பை பார்வையிடுவதோடு விஜய்சேதுபதி உடன் செல்பி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும் விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவித்து வருகின்றனர்.