தமிழக கட்சி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பாஜக மற்றும் திமுகவை சரமாரியாக விமர்சித்த அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதன்பிறகு திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருடைய மனது முழுவதுமாக இங்கு தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வராமல் இருக்கும் அளவிற்கு விசிகவோ அல்லது நானோ பலவீனமானவன் கிடையாது என்று கூறினார்.

இந்நிலையில் விஜய் பேசியதற்கு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விசிக தலைவர் திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் பற்றி விரிவான அறிக்கை கொடுத்தார். ஆனால் அதன் பிறகும் எங்கள் தலைவரைப் பற்றி விஜய் பேசியுள்ளார். இதை பார்க்கும் போது அவர் கட்சி ஆரம்பித்தது எங்கள் தலைவரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகத்தானோ என்று தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுத்திருக்க வேண்டிய அவசியம் வராது என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் முன்னதாக கட்சி ஆரம்பித்து முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.