“வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்து”….. தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை….!!!!!

வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்தை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை, திருச்சி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது. வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பல வருடங்களாக தினமும் அதிகாலையில் ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தானது பட்டுக்கோட்டை மார்க்கமாக இயக்கப்பட்டு வந்தது.

இதனால் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்பொழுது மதுரைக்கு காலையில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் பயணிகளின் கூட்டத்தை பொருத்து இயக்கப்படுகின்றது. மற்ற நாட்களில் இந்த பேருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றது. இதனால் மதுரைக்கு செல்லும் பயணிகள் பல பேருந்துகளில் சென்று மதுரைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரமும் பணமும் வீணாகின்றது. ஆகையால் பொதுமக்கள் இந்த பேருந்தை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.