திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் ருக்மணி நகரில் தனியார் நிறுவன ஊழியரான தரணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கிருபாவதி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தரணி தனது மனைவியின் நகைகளை வாங்கி செலவு செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தரணி கடந்த 30- ஆம் தேதி காட்டூர் ராம் நகரில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் தரணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தரணியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தரணி கிருபாவதிக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் உனக்கு நான் அதிக அளவு கஷ்டம் கொடுத்து விட்டேன். எத்தனை முறை நீ என்னை சமாதானப்படுத்தினாலும் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன். நீ வருவதற்குள் நான் இறந்து விடுவேன் என பேசி அனுப்பியுள்ளார். அந்த குறுஞ்செய்தியை பார்த்து கிருபாவதி வருவதற்குள் தரணி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.