கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு என்பவரின் உத்தரவு பேரில், வரி வசூலிக்கும் பணியானது நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள 348 கடைக்காரர்களில் வரி கட்டத்தவறிய கடைக்காரர்களிடம் கடை வாடகையை வசூலிப்பதற்காக நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் நேரடியாக சென்றுள்ளனர்.
அப்போது நடப்பு ஆண்டு வரி மற்றும் ஏற்கனவே கட்ட வேண்டிய வரிபாக்கி ஆகியவைகளை கட்டுமாறு பணியாளர்கள் கேட்டுள்ளனர். மேலும் வரிபாக்கி உள்ள 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள், நகராட்சி பணியாளர்களை சிறைபிடித்து கடைக்கு முன்பு அமரவைத்து, நகராட்சி ஆணையாளர் இங்கு வந்து, கடைக்காரர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், கவுன்சிலர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி மார்க்கெட் பகுதி கடைக்காரர்கள் கூறியுள்ளதாவது, நகராட்சி மார்க்கெட் பகுதியில் கழிப்பிட வசதியில்லை. மழை காலங்களில் கடைகள் முழுவதும் மழைநீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. மேலும் பல கடைகளுக்கு மின் இணைப்பு வசதியும் இல்லை. இதனையடுத்து எந்த ஒரு நகராட்சி கடைகளையும் முழுமையாக பராமரிப்பு செய்து தரவில்லை. கடை வாடகை அதிகமாக உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்தால் அதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பாலு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது இன்று (புதன்) முதல், கடை பராமரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது, வெளியூர் வியாபாரிகளை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் என முடிவெடுக்கபட்டது.
எனவே வருகிற 10 நாட்களுக்குள் கடைக்காரர்கள் அனைவரும் கடை வாடகைகளை செலுத்தி விட வேண்டும் என பாலு கூறினார். இதனையடுத்து கடைக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு கடை வாடகையை வசூலிக்க வந்த நகராட்சி பணியாளர்களை சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.