வங்கி வாடிக்கையாளர்களே உஷார்!…. இந்த செயலி மூலம் பணம் திருடும் அபாயம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

நாட்டில் இணைய வழி குற்றங்களை தடுக்க தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது. செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் இருப்பதாவது “நிழல் உலக சந்தையில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சோவா என்ற வைரஸ் முதன் முறையாக விற்பனைக்கு வந்தது. அது யூசர்நேம், பாஸ்வேர்டு போன்றவற்றை திருடக்கூடியது ஆகும். முதலாவதாக அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை அந்த வைரஸ் குறி வைத்தது. கடந்த ஜூலைமாதம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை தன் இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது. அந்த வைரசை உருவாக்கியவர்கள், இப்போது அதன் 5வது தலைமுறையை உருவாக்கிவிட்டனர்.

இந்த வைரஸ் குரோம், அமேசான் ஆகிய சட்டப்பூர்வ செயலிகளின் சின்னத்தை காட்டும் போலி ஆன்ட்ராய்டு செயலிகளுக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும். அந்த செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதற்காக அவ்வாறு ஏமாற்றும். போலி ஆன்ட்ராய்டு செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ததும், அந்த போனில் முன்பே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகளின் விபரங்களை வைரசின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வருக்கு தெரிவிக்கும். அதன் வாயிலாக குறி வைக்கப்படும் செயலிகள் தேர்வுசெய்யப்படும். அச்செயலிகளின் முகவரிகளை சோவாவைரசுக்கு சர்வர் தெரிவிக்கும். அதன்பின் அவை எக்ஸ்.எம்.எல். பைலில் சேமிக்கப்படும். இதனிடையில் குறிவைக்கப்பட்ட செயலிகள் குறித்து வைரசுக்கும், சர்வருக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் நடைபெறும்.

சோவா வைரஸ், மொபைல் பேங்கிங் செயலிகள், பணம் செலுத்தும் செயலிகள், கிரிப்டோ கரன்சி செயலிகள் என 200க்கு அதிகமான செயலிகளை குறி வைத்து செயல்படுகிறது. அந்த செயலிகளுக்கு மேல் ஒரு அடுக்கை உருவாக்கி, ஆன்ட்ராய்டுபோன் பயன்படுத்துபவர்களை ஏமாற்றக்கூடியது. மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும் போது யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடிவிடும். இது வங்கிக் கணக்கிலுள்ள பணம் திருடுபோவதற்கு வழிவகுக்கும். இந்திய இணையவெளியில் சோவா வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்துள்ளது.

இந்த வைரஸ் ஆன்ட்ராய்டு போனுக்குள் ஊடுருவி, அதனை முடக்கிவிடக்கூடியது. பின் “செட்டிங்ஸ்” பகுதிக்கு சென்று வைரசை நீக்குவதும் கடினம் ஆகும். அவ்வாறு நீக்கினாலும் இந்த செயலி பாதுகாப்பானது என்ற செய்தியுடன் திரும்ப வந்துவிடும். ஆகவே வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவேண்டும். முறையான ஆப்ஸ்டோர் வாயிலாக செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டும். செயலிகளின் விவரங்களை படித்து பார்க்கவேண்டும். மேலும் அவ்வப்போது அப்டேட் செய்யவேண்டும். அத்துடன் செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை அளிக்கக் கூடாது. நம்பகத்தன்மை அற்ற வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக வரும் சந்தேகத்துக்குரிய லிங்க்குகளை திறக்கக்கூடாது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.