நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் அல்லாமல் ரேஷன் அட்டைதாரர்கள் நாட்டில் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் பயன் அடைந்து வருகிறார்கள். நாட்டிலுள்ள சாமானிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ரேஷன் கடைகளில் புதிய விதிமுறை ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அதாவது அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு தராசுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் மக்களுக்கு குறைவில்லாமல் சென்றடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.