இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 72 கோடியை அரசு ஒதுக்கியது.மேலும் பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது. அதாவது, இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று நேரடியாக டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் டோக்கனில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். அதை வைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்கள் பரிசு தொகுப்பை தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ளலாம்..
பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றபின் அனைவருக்குமே அதுதொடர்பான தகவல், செல்போன் மூலமாக மெசேஜ் அனுப்பப்படும். பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் அதுபற்றி இலவச தொலைபேசி எண்களான 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.