ரூ.9-க்கு ரசீது தர மறுப்பு…. பல்பொருள் அங்காடிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் தெருவில் லாவண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு விழுப்புரம் பாகர்ஷா தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்று 992 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் 1001 ரூபாயை வாங்கிக் கொண்டு 992 ரூபாய்க்கு ரசீது கொடுத்தனர். இது குறித்து லாவண்யா கேட்டபோது பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 9 ரூபாய் சேர்த்து பெற்றுக் கொண்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அதற்கும் சேர்த்து ரசீது தருமாறு லாவண்யா கேட்டுள்ளார். அப்போது மறுநாள் வருமாறு கூறி 2,3 முறை லாவண்யாவை அலைக்கழித்தனர்.

இது குறித்து லாவண்யா விழுப்புரம் நுகர்வோர் குறைவு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் அமலா, மீரா மொய்தீன் ஆகியோர் 9 ரூபாயை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 31.1.2021 தேதியிலிருந்து பல்பொருள் அங்காடி உரிமையாளர் திருப்பி கொடுக்க வேண்டும். மேலும் சேவை குறைபாடு மற்றும் பெண்ணுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5000 ரூபாய், நுகர்வோர் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபரதம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.