பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள சஹியாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெட்ரோல் பங்க் ஊழியர்களால் ஒரு போலீஸ்காரர் தாக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு, அது வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போலீஸ்காரர் ஒருவர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு ரூ.120 மதிப்புள்ள பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளார். ஆனால் ஊழியர் தவறுதலாக ரூ.720 மதிப்புள்ள பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் நிரப்பியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறின் போது, காவலர் அந்த ஊழியரை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் இணைந்து காவலரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

வெறும் 30 வினாடிகளில், காவலர் மீது 10 முறை தடியால் தாக்கப்பட்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசார் தலையீடு செய்ததுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடுவே நடந்த இந்த தாக்குதல், போலீசாரின் பாதுகாப்பு மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.