
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் வசித்து வந்த 2 இளைஞர்கள் சமீபத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மேலும் கொலை முயற்சி செய்ய மேற்கொண்ட நபர்களை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜனவரி மாதம் 17ஆம் தேதி தீக்காயம் அடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்வோம்.
எங்களது பொறுமைக்கு எல்லை உண்டு என கூறியுள்ளார். இந்த நிலையில் அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் கூறியதாவது, இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.
பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு பதிவிட்டிருந்தார்.