தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கு தொடர் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அதன் பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதைய அம்சத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க, வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 12, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மட்டும் துணிவு, வாரிசு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.