சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, சட்டப்பேரவையில் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை. தமிழகத்தில் 13,428 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கோடி பேருக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 15 மாதங்களில் 1.50 இலட்சம் இலவச விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. “நான் நாள்தோறும் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் உழைக்கவில்லை. அது என்னுடைய இயல்பான குணம். தமிழக மக்களின் நலனுக்காக சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம். ஏன் சொல்லாமலும் செய்வோம்”. கடந்த பத்து வருடங்களாக முடங்கிப் போயிருந்த தமிழகத்தை தற்போது முன்னோக்கி ஓட வைத்துள்ளோம்.
அனைத்தையும் மத்திய அரசிடம் கேட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காப்பதற்கும் ஆட்சியின் வலிமையை உணர்த்துவதற்கும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் தொழில் வளர்ச்சியில் சமூக மாற்றம், கல்வி, பயன்பாடு போன்ற அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். மத வாதம், இனவாதம், தீவிரவாதத்தை அழிப்போம். கடந்த ஓராண்டில் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.