யஷஸ்விக்கு 21 வயசு தான் ஆகுது…. இப்போ ஒருநாள் அணியில் வேண்டாம்…. தினேஷ் கார்த்திக் கருத்து இதுதான்..!!

யஷஸ்வி ஜெய்ஷ்வாலை இவ்வளவு வேகமாக ஒருநாள் அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய அணியின் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்..

ஐபிஎல்-2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேஆஃப்களுக்குச் செல்லத் தவறினாலும், அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அற்புதமான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். யஷஸ்வி ஜெய்ஷ்வால் இந்த ஆண்டு சீசனில் களமிறங்கினார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் ராஜஸ்தானுக்கு சிறப்பான பங்களிப்பு செய்தார். இந்த சீசனில் ஜெய்ஷ்வால் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது இன்னிங்ஸில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், இந்திய அணி சார்பில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெய்ஷ்வால் சேர்க்கப்படுவார் என பல தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக், ஜெய்ஷ்வால் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய நிகழ்வுக்கு ஜெய்ஷ்வாலைத் தேர்ந்தெடுப்பது முன்கூட்டியே இருக்கும் என்று கார்த்திக் கூறினார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது, “யஷஸ்வியை இவ்வளவு வேகமாக ஒருநாள் அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு அற்புதமான இளம் வீரர். அவருக்கு இப்போது 21 வயதுதான் ஆகிறது. ஜெய்ஷ்வாலுக்கு நிறைய எதிர்காலம் இருக்கிறது. அவர் ஒரு சிறப்பு வீரர். எனவே அவரை முதலில் இந்திய டி20 அணியில் இடம் பெறச் செய்யுங்கள்.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு யஷஸ்வி தயாராக இருக்க வேண்டும். அணியில் இடம் பெற்றால் டி20 மட்டுமின்றி ஒருநாள் போட்டியிலும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது. நிறைய அழுத்தம் இருக்கும்” என்று ஐசிசி ரிவியூ ஷோவில் கூறினார்.

Leave a Reply