மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாப சாவு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுவை மாநிலம், தவளக்குப்பம் அருகேயுள்ள இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருடைய மகள் கீர்த்தனா என்கிற அங்காளபரமேஸ்வரி (21). பட்டதாரியான இவருக்கு கிருமாம்பாக்கம் அருகேயுள்ள ஈச்சங்காட்டை சேர்ந்த சபரி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தனா மேற்படிப்புக்காக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டைப் பெறுவதற்கு நேற்று காலை கீர்த்தனா சபரிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார்.
புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையிலுள்ள மரப்பாலம் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சபரிநாதன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின்பக்க சக்கரம் கீர்த்தனாவின் தலை மற்றும் உடலில் ஏறியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அருகிலிருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சைப்பலனின்றி கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக சபரிநாதன் காயம் எதுவும் இன்றி தப்பினார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *