திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டை பகுதியில் பப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக கரூர் ஆயுதப்படையில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கரடிப்பட்டி அருகே சென்ற போது சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.