கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சீனிவாசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெகதேவி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் சென்றுள்ளார். அந்த சமயம் பர்கூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரமேஷின் மனைவி சரசு(28) தனது மகன் தமிழ்ச்செல்வனுடன்(8) ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அவர்களை பார்த்த சீனிவாசன் அடிக்கும் வெயிலில் ஏன் நடந்து செல்கிறீர்கள் எனக்கூறி தாய்,மகன் இருவரையும் மொபட்டில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது பர்கூரிலிருந்து கொண்டப்பநாயனபள்ளி நோக்கி சென்ற டிப்பர் லாரி முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.