இந்தியாவில் பெய்து வரும் பருவமழையால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அழிந்தது. அதில் ஒரு வீடு மட்டுமே மிஞ்சியுள்ளதால் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமேஜ் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இரவில் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது பலத்த இடி இடித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். அப்போது மொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நாங்கள் அருகில் உள்ள கோவிலில் தங்கினோம். இந்த பேரழிவில் என் வீடு மட்டுமே மிஞ்சியது என்று கூறினார். அதே கிராமத்தைச் சேர்ந்த வயதான பக்ஷி ராம் கூறியதாவது, எனது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டனர். வெள்ளத்தை குறித்த தகவல் எனக்கு அதிகாலை 2 மணிக்கு கிடைத்தது. அப்போது நான் ராம்பூரில் இருந்தேன். அதனால் உயிர் தப்பினேன்.

அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது கிராமமே அழிந்து விட்டது. என் குடும்பத்தை தற்போது நான் தேடி வருகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார். இதைத்தொடர்ந்து சமேஜ் மற்றும் ராம்பூரை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு செய்து வருகின்றனர். இந்த பேரழிவில் மொத்தம் 53 பேர் மாயமாகி உள்ள நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது என்று மேலாண்மை தெரிவித்துள்ளது. மேலும் கிராமத்தில் வீடுகளை கட்டுவதற்கு நிதி உதவிகள் விரைவில் வழங்கப்படும் என இமாச்சல பிரதேஷ் மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.