கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அன்பு நகரில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தினகரன் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்கனவே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததோடு, முதியவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீக்காயங்களுடன் கிடந்த முதியவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.