கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.‌ இந்நிலையில் மீன் வியாபாரி கனகா என்ற பெண்ணை 2-வது ஆக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மீன் வியாபாரி அடிக்கடி முதல் மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுவன் அடிக்கடி கனகாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் தன் தந்தை அடிக்கடி தகராறு செய்து வந்ததால் கடந்த 13-ஆம் தேதி கனகா வீட்டிற்கு சிறுவன் சென்றார். அப்போது கனகாவுக்கும் சிறுவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கனகாவை சரமாரியாக குத்தி சிறுவன் கொலை செய்தார். அதன்பிறகு வீட்டின்  கதவை பூட்டிவிட்டு வாசலில் சிறுவன் படுத்து தூங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மீன் வியாபாரி அங்கு சென்றுள்ளார். அப்போது தன் மகன் மீது இரத்த கரை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது கனகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக அன்னூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.