தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்த நாளை வெகுசிறப்பாக  குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், மாநிலத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சேப்பாக்கம் டிரிப்ளிகேன் பகுதிக் கழகச் செயலாளர் மதன் மோகன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நமது சேப்பாக்கம் டிரிப்ளிகேன் சட்டமன்ற தொகுதியில் இயங்கி வரும் அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் இன்று பிறக்கின்ற குழந்தைகளுக்கு தலா ஒரு தங்க மோதிரம் பரிசளிக்கும் விதமாக, இன்று காலை வரை பிறந்த 12 குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்து மகிழ்ந்தோம். தாய் – சேய் நலனை உறுதி செய்யும் வகையில் Baby Kits – ஐ வழங்கி வாழ்த்தினோம்” என தெரிவித்துள்ளார்.