உத்திர பிரதேசத்தில் உள்ள ஆஷியானா பகுதியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வீடு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (26) என்ற பாதுகாப்பு வீரர் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆண்டிலா என்ற பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து முகாமுக்கு அரசு வாகனத்தில் திரும்பி உள்ளார். இந்த வாகனம் புறப்பட்ட சற்று நேரத்தில் திடீரென குண்டு வெடித்த சத்தம் கேட்டது. உடனே சகவீரர்கள் அங்கு சென்று பார்த்த போது குண்டடி பட்ட பலத்த காயங்களுடன் விபின் குமார் சுயநினைவு இன்றி மயங்கி கிடந்துள்ளார்.

இவரை உடனடியாக சக வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், விபின் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இது குறித்து காவல் ஆய்வாளர் அஜய் பிரகாஷ் மிஸ்ரா கூறியதாவது, பாதுகாப்பு படை வீரன் விபின் குமார் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தாரா அல்லது யாரேனும் சுட்டுக் கொன்றார்களா அல்லது தற்செயலாக நடந்த சம்பவமா என்று விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தடவிய நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் உயிரிழந்த விபின் குமாருக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு திருமணம் நடைபெற இருந்ததாக சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.