முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு – என்ஐஏ பரபரப்பு தகவல்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான சப்னா சுரேஷிற்கு பிணை வழங்கக் கூடாது என்று என்ஐஏ தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியவர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர், சரித் ஆகிய மூன்று நபர்களிடம் சுங்க வரித்துறை, என்ஐஏ மற்றும் அமலாக்கப் பிரிவினர் என்று பல தரப்பினர்களும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரையில் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்பிறகு அமலாக்கப் பிரிவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை வழங்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கற்பனை கதைகளால் குற்றம்சாட்டப்பட்டு உள்ளேன்.இந்த வழக்கு மத்திய அரசுக்கும் மற்றும் மாநில அரசுக்கும் இடையில் நடக்கும் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகும். மீடியாக்களின் வண்ணமயமான கட்டுக்கதைகள் ஒளிபரப்பாகிறது. உபா சட்டத்தின் 15,16,17 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எத்தகைய முதன்மை ஆதாரங்களும் கிடையாது என்று கூறியுள்ளார்.

அதற்கு பதில் கூறிய என்ஐஏ அதிகாரிகள், மிகவும் பரபரப்பான வழக்காக இது கருதப்படுகிறது.இவர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் ஆகிய இரண்டின் செல்வாக்கையும் அனுபவித்து இருக்கிறார். தூதரக அலுவலக பணியிலிருந்து ராஜினாமா செய்த பிறகும் ஸ்வப்னா சுரேஷிற்கு மாதம் தவறாமல் ஆயிரம் டாலர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. அந்த அளவிற்கு தூதரகத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும் முதலமைச்சர் அலுவலகத்திலும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதனால் இவருக்கு பிணை வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.