ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தி 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2-ம் இடத்தில் சமமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4145 ரன்கள் எடுத்த முதலிடத்தில் இருக்கிறார். மேலும் விராட் கோலி 4066 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா 4050 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.