கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தமிழ், மலையாளம் உட்பட மூன்று மொழிகளில் பேசி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி வாக்கு சேகரித்தார். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரனுக்கு ஆதரவாக பாஜக மகளிரணி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜயதாரணி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசி வாக்கு சேகரித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், விளவங்கோடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எனினும், பாஜக சார்பில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மீண்டும் மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால், ஒரு முக்கியமான பதவி அவருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.