“மின் வாரியத்தை சீரழித்த அதிமுக”… ஆனா நாங்க 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகள் வழங்குகிறோம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

கடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்துள்ளனர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதத்திற்கு 25,000 இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே திட்டத்தை முடிக்க மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது.  4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில், முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்றுதான் சொல்லவேண்டும். அன்று முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு வருகின்றன. தற்போது அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் துறையின் பணிகளை செய்து வருகின்றனர். விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்காது என்று பேசினார்.

தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011 -16 அதிமுக ஆட்சியில் 82,987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1,38,592 பேருக்கும்தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன.

அதாவது, கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கு மொத்தமாகவே 2 லட்சம் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளன.. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 1 லட்சம் இணைப்புகள் வழங்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்து உள்ளனர். அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான். திமுகவின் ஆட்சி உழவர்களின் ஆட்சியாகவே எப்போதும் இருந்து வருகிறது என்று கூறினார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *