மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் தனது நண்பரான மகாபிரபு(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளை திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மினி லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் மினி லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாபிரபுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்திபனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.