பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற  மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதவர்கள் 12 -ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதவும், 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இன்று விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் சிறப்பு அனுமதி முறையில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்குக் கூடுதல் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.