மழைக்காலங்களில்….. “கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய வேண்டும்”….. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்..

சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பே ஓரிருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்தில் தங்கி பள்ளி கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள்.

இதில் குறிப்பாக பள்ளிக்கூட கட்டடங்களில் நீங்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம். முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். இதன் மூலமாக இந்த முறை சென்னை நகரில் முக்கிய பகுதிகளில் மழைதேங்காது என்று நான் ஓரளவிற்கு நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்.

அதை வேளையில் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. மழை காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களும், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளும் தனித்தனியாக இயங்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசு துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒவ்வொரு மாநகராட்சி பகுதியிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கடந்த முறை வானிலை எச்சரிக்கை தகவல்களை குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது. அதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவலை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் அளிக்கக்கூடிய தரவுகளையும், வருவாய்த்துறையினர் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளை நீங்கள் செய்ய வேண்டும்.

நிவாரண மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவர்களுக்கு தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம், மற்ற சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஒவ்வொரு நிவாரண முகாமிற்கு ஒவ்வொரு பொறுப்பு  அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நான் கவனம் எடுத்து செயல்பட்டால் கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை  நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம், உங்களுக்கு ஏற்படக்கூடிய எண்ணங்களை உடனுக்குடன் அரசுக்கு நீங்கள் தெரிவித்து அந்த பணிகளை நீங்கள் வேகப்படுத்த வேண்டும்.

இது போன்ற ஆலோசனை கூட்டத்தில் மட்டும் தான் ஆலோசனை சொல்லனும்  என்று இல்லை, உடனுக்குடன் நீங்கள் சொல்ல வேண்டும். பொது தொலைபேசி எண்களை பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துக்கள் ஏற்படாமல் பார்க்க வேண்டும். மொத்தத்தில் மக்களை காக்க வேண்டும். அது ஒன்றே நம்முடைய இலக்காக இருக்கு. ஆகவே நீங்கள் அனைவரும் இதில் முழு கவனத்தோடு ஈடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொண்டு இந்த கூட்டத்திலே அனைவரும் சந்தித்து இந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்” என்று கூறினார்..