
ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் வீரப்பன் பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக சசிகுமார் ஈரோடு நகர காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சசிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சசிகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சசிகுமார் கடந்த மூன்று ஆண்டுகளாக காவலர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த நிலையில் சசிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உழைச்சலில் சசிகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.