மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு…. உரக்கடைக்காரர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தில் கணேஷ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொய்யாபிள்ளைசாவடி பைபாஸ் அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரபாவதி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கமித்ரா(11) என்ற மகளும், குருசரண்(9) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கணேஷ் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த கணேஷ், தான் இல்லாமல் மனைவியும் குழந்தைகளும் என்ன ஆவார்கள் என நினைத்து அவர்களுக்கு திராட்சை பழச்சாறில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த பிரபாவதி மற்றும் குழந்தைகள் வாந்தி எடுத்ததை பார்த்து மனம் தாங்காமல் கணேஷ் அன்னப்பன்பேட்டை கிராமத்திற்கு சென்று முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக கணேஷ் தனது நண்பரான அக்பர் அலி என்பவருக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோவில் “பாய் என்னை மன்னித்து விடுங்கள். 80 லட்சம் வரை கடன் வந்துவிட்டது. இதனால் சாக முடிவெடுத்து மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எலி மருந்து குடுத்து விட்டேன். அவர்கள் வீட்டில் வாந்தி எடுத்து கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடியவில்லை. முடிந்தால் அவர்களை காப்பாற்றுங்கள். நிறைய பேர் கடன் வாங்கி என்னை ஏமாற்றி விட்டார்கள் என அதில் பேசியுள்ளார். இதனை கேட்டு பதறிய அக்பர் அலி உறவினர்களின் உதவியோடு பிரபாவதி மற்றும் குழந்தைகளை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து முந்திரி தோப்பில் சடலமாக தொங்கிய கணேஷின் உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கணேஷின் சட்டை பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தனது சாவுக்கு காரணம் சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் தச்சம்பாளையம் பகுதியில் வசிக்கும் டி.எம்.ஆர் சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், ராஜா, கண்ணன், விஜயராகவன், நடராஜன் மற்றும் நாயுடு மங்கலத்தில் வசிக்கும் புஷ்பராஜ் ஆகியோர் தான். மேலும் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விவரம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply