
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பீஜ்னோர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்கீத் குமார். இவரது மனைவி கிரண்(30). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த மார்ச் 8ஆம் தேதி தாய் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வரும்போது கார் மோதி விபத்தில் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அன்கீத் குமார் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில் அந்த காரின் உரிமையாளர் அன்கீத்தின் நண்பர் சச்சின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அன்கீத் மற்றும் சச்சினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அன்கீத் தனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிரணுடன் திருமணம் நடந்ததாகவும், ஆனால் குழந்தை இல்லை என்பதால் தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்ய விரும்பியதாககூறியுள்ளார். அதற்கு தனது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக கூறினார்.
இதனால் கிரணை அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வரும்போது பைக்கில் பெட்ரோல் போட வேண்டும் என கூறி சாலையில் இறக்கி விட்டு சென்றதாகவும், அப்போது தனது நண்பரை காரை ஏற்றி கொலை செய்ய திட்டம் தீட்டியதையும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அன்கீத் மற்றும் சச்சின் ஆகிய இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மனைவியின் சகோதரியை திருமணம் செய்ய தனது மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.