பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் பாய்ண்ட் ஆப் செயல் கருவிகள் மற்றும் ஆன்லைன் வணிகத்தில் ரூபே கார்டு மற்றும் பீம் செயலியை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வதை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, இது மின்னணு பண பரிமாற்ற முறையில் இந்தியா அடைந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இயற்கை விவசாய விளைபொருட்கள், ஏற்றுமதி மற்றும் விதைகள் போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக மூன்று புதிய கூட்டுறவு சங்கங்களை அமைக்க பொருளாதார விவரங்ளுக்கான மந்திரி சபை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் கூறியதாவது, தேசிய ஏற்றுமதி சங்கம், தேசிய ஆர்கானிக் பொருட்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய அளவிலான பன்மாநில விதை கூட்டுறவு சங்கம் எனும் பெயர்களில் இந்த சங்கங்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார். அதே போல் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய குடிநீர் சுகாதார நிலையத்திற்கு ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாந்த் முகர்ஜி பெயரை சூட்டுவதற்கு மத்திய மந்திரி சபை முன் தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையத்தை  கடந்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.