தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரையில் பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்தார் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகாசி மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளில் இந்த மாதத்தின் இறுதிக்குள் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.

அதன் பிறகு மதுரையில் சுமார் 500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, ஏற்கனவே உள்ள குழாய்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார். மேலும் தமிழகத்தில் உள்ள மதுரை போன்ற அனைத்து பெரு நகரங்களிலும் அதன் அருகில் உள்ள நகரங்களிலும் பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்