கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள சூழலில், சுயேச்சையாக போட்டியிடும் இருவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
அதன்படி ஆரபவி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் குருபுத்ரா கெம்பன்னா குல்லூர், கோகாக் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் புந்தலீலா குல்லூர் ஆகிய இரண்டு பேரும் சகோதரர்கள் ஆவர். இந்நிலையில் இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. தேர்தலில் தாங்கள் வெற்றியடைந்தால் தங்களது தொகுதியில் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதற்கு மணமகன்-மணமகள் திருமண திட்டம் 2023 என பெயர் வைத்துள்ளனர். இந்த திட்டம் இளம் பெண்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை, வீடு இல்லாதவர்களுக்கு புது வீடு கட்ட ரூபாய்.3-5 லட்சம், வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.5-10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் அறிவித்து உள்ளனர்.