வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ வெறும் ரூ.7,000க்கு தருவதாக போலி விளம்பரம் செய்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் இந்த விளம்பரத்தை பார்த்து நம்பியுள்ளார். பின்னர் விளம்பரத்தில் இருந்த நபர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக பணம் அனுப்பியுள்ளார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை.

பின் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்க முயற்சித்தபோது, அந்த நபர்கள் மிரட்டி பேசியதோடு, “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், நெருங்கிப் பாருங்கள்” என சவால் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.பி பாஸ்கரனின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் (22), திருச்சி அவணியாபுரத்தைச் சேர்ந்த சஜித் அகமது (19) ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது  43 புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்டலில் பதிவாகியிருப்பதும் உறுதியாகியுள்ளது.

அவர்களிடமிருந்து  1.30 லட்சம் ரொக்கம், ஒரு லேப்டாப், நான்கு செல்போன்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா பாராட்டியதோடு, மக்கள் இணையத்தில் வரும் குறைந்த விலை விளம்பரங்களில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.