கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலி கரையை அடுத்த புன்னமூடு பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி வித்யா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு நட்சத்திரா என்ற ஒரு மகள் இருக்கின்றார். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் மனைவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தாய் சுனந்தா மற்றும் மகள் நட்சத்திராவுடன் மகேஷ் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை இரவு மணியளவில் சுனந்தா பக்கத்து வீட்டில் வசித்து வந்த தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் மகேஷ் தன்னுடைய மகள் நட்சத்திராவை கோடாரியால் வெட்டியதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுனந்தாவை மகேஷ் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் படுகாயம் அடைந்த நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் மகேஷின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதாவது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில் மறுமணம் செய்வதற்காக மகேஷ் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மகேஷுக்கு ஏற்கனவே நட்சத்திரம் என்ற ஒரு பெண் குழந்தை இருந்த காரணத்தினால் பலரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக மகேஷ் நட்சத்திராவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மகேசை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.