தமிழ்நாடு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விருதுநகர் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். பேருந்தில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிபணியிடங்களை நிரப்பப்படாமல் இருப்பதும் இதனால் பணியில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாவதும் தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது.

அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவது என்பது தினசரி செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு வருடம் தோறும் காலி பணியிடங்களை நிரப்புவோம் மற்றும் புதிய அரசு பேருந்துகளை வாங்குவோம் என்று வெற்று அறிக்கை வெளியிடுகிறது. திமுக அரசு உடனடியாக போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதோடு பழுதடைந்த பேருந்துகளை பயன்படுத்தி பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.