துணிவு வெளியாகும் அதே நாளில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ,ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடலான ‘ரஞ்சிதமே’  ‘தீ தளபதி’  ஆராரிராரோ பாடுதம்மா உள்ளிட்ட பாடல்கள்  அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது. அண்மையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து ரசிகர்கள் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில்,  வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 4ஆம் தேதி மாலை வெளியாகும் எனவும், வாரிசு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ டிரைலர் வெளியாகி 9 மணி நேரத்தில் 17 மில்லியன்களை கடந்து செல்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பொங்கல் பக்கா கொண்டாட்டம் நண்பா என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி துணிவு படம் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், போட்டியாக வாரிசு படமும் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே துணிவு, வாரிசு ஒரேநாளில் வெளியாவதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வீரம் மற்றும் ஜில்லா இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படமுமே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/DilRajuOfficial/status/1610673603925921792