கடலூர் மாவட்டம், மதியனூர்  பகுதியைச் சேர்ந்த ரோஹினி (56), தமிழ்செல்வி (44) ஆகிய இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்கள் தங்களது உறவினரின் இறுதிச் சடங்கிற்காக மும்பை சென்று திரும்பும் வழியில்,  அவர்கள் பயணித்த மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்  ரெயில் பெட்டியில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் 2 பெண்களுடனும் நட்புடன் பேச, சோலாப்பூர் ரயில் நிலையத்தில் அந்த நபர்கள் 2  பெண்களுக்கும் மயக்க மருந்து கலந்த டீ ஐ கொடுத்துள்ளனர். மயக்க மருந்து என தெரியாமல் தேயிலையை குடித்த இருவரும் மயக்கமடைந்த நிலையில்,

சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்செல்விக்கு மயக்கம் தெளிந்து எழுந்தபோது என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துள்ளார். தனது நண்பர் ரோஹினி மயக்கத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போதுதான் அவர்களது தாலி, வளையல் உள்ளிட்ட நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சக பயணிகளின் உதவியுடன் உடனடியாக ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் தகவல் பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரக்கோணம் ரயில் நிலையம் 6-வது தளத்தில் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது அரை மயக்க நிலையில் இருந்த 2 பெண்களையும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார் மேற்கொண்ட  விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் தண்ணீர் கேனில் மயக்க மருந்து கலந்த டீ  கொடுத்ததாகவும், அதை குடித்ததால் இருவரும் மயக்கமடைந்ததாகவும், அதன் பின் 5 பவுன் நகைகளை திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வடக்கு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் நிலைய கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.