தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக மழை பொழிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மிக அதிக அளவில் மழை பெய்த நிலையிலும் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது. ஆனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அங்கு சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு பேட்டி கொடுத்த அவர் இழப்பீடுகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு நிவாரணத் தொகை வழங்கக்கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.11 லட்சம் ஹெக்டர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளது. புயலின் வீரியத்தை கணக்கில் கொண்டு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும். மேலும் சேதம் குறித்து கணக்கிட மத்திய மீட்பு குழுவை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.