
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த வகையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்த மாணவி அந்த கல்லூரியில் படித்த ஒரு மாணவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு விடுமுறை என்பதால் இந்த மாணவியும் மாணவனும் கல்லூரியில் உள்ள வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறு செய்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து மாணவி தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால் பயந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்த நிலையில் அந்த கும்பலில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர் என்பதும் அவர்தான் மற்ற இருவரையும் அழைத்து வந்தது தெரிய வந்தது. மேலும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக வழக்கத்திலும் பாலியல் பலாத்கார முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.