தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட  மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில் ரஜினி, கமல், சரத்குமார் மற்றும் அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், கேஎஸ் ரவிக்குமார், அர்ஜூன், விஜய் சேதுபதி, சரத்குமார், சிரஞ்சீவி, தனுஷ் மற்றும் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் உதவி செய்தனர்.

கடந்த 3 வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பொன்னம்பலம் கடந்த 6-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் பொன்னம்பலத்தின் அக்கா மகன் ஜெகநாதன் என்பவர் அவருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிலையில் தற்போது வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு பொன்னம்பலம் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.