“பால் கொடுக்க முடியவில்லை”…. குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3-வது தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் பிவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பி.பி.ஏ பட்டதாரியான ஆஷா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஷாவுக்கு புழல் சக்திவேல் நகரை சேர்ந்த அமீன் பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்த ஆஷாவுக்கு தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த ஆஷா நேற்று தனது வீட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஆஷாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.