தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றம் 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக அமைச்சர் பி மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவ பிரசாந்த் போன்றோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து முதன்முதலாக பாலமேடு அய்யனார் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதனை தொடர்ந்து மகாலிங்கம் மடத்திற்கு சொந்தமான காளை, பத்ரகாளியம்மன் கோவில் காளை, பாலமுருகன் கோவில் காளை, பட்டாளம்மன் கோவில் காளைகள் என வரிசையாக ஒவ்வொரு காலிகளும் அவிழ்த்து விடப்பட்டது. இதனையடுத்து மாடு பிடி வீரர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் 2 மணி நேரம் காளைகளை அடக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காளைகள் அவிழ்க்கப்பட்டு மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்துள்ளது.
இதில் காவல் ஆய்வாளர் செய்தியாளர் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 12 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 15 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர் போன்றோர் பலத்த காயமடைந்துள்ளனர். 9 காளைகளை அடக்கிய பாலமேடு வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்தராஜனை காளை குத்தி வீசியது. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.