சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் முதல் கேள்வியாக விளையாட்டுத்துறை தொடர்பான வினா எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது. இதில் உடற்பயிற்சி கூடம் 400 மீட்டர், தடகள பாதை, பார்வையாளர்கள் மாடத்துடன் கூடிய திறந்தவெளி விளையாட்டு அரங்கம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் 60 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. மேலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த புதிய வசதிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறியுள்ளார். இதனையடுத்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த ஆட்சியில் 44-வது உலக செஸ் போட்டி கடந்த வருடம் நடைபெற்றது. இந்த செஸ் போட்டியில் 180 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் பெண்களுக்கான டபுள் யு டி ஏ டென்னிஸ் போட்டியும் நடத்தப்பட்டது. பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி போன்றவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகாண விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது . மாநில, மாவட்ட அளவிலான இந்த போட்டிகள் வருகிற ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். மேலும் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவது பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.