கடந்த 10 வருடங்களுக்கு பின் சென்னை சங்கமம் நிகழ்ச்சியானது வரும் 13 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 17ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தற்போது நிகழ்ச்சிகளின் விபரம் பற்றி தெரிந்துக்கொள்வோம். தினசரி கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

அப்போது தமிழகத்தின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் அடிப்படையில் உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாக்கள் நடைபெறும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.