“பாட்டாளிகளின் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்”…..! அன்போடு அழைத்த ராமதாஸ் …!!

தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை பறக்க விடுமாறு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை அவ்வையாரின் நல்வழி நாற்பது பாடலை கூறி டாக்டர் ராமதாஸ் அழைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத் தத்துவங்களை இரண்டே வரியில் எழுதியவர் அய்யன் திருவள்ளுவர். அவரை விட எளிமையாக பல கவிதைகளை படைத்து அதன் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை இந்த உலகுக்கு கூறியவர் அவ்வையார். அவரின் நல்வழி நாற்பது பாடலை இந்த இனிய தருணத்தில் நான் கூற விளைகிறேன்.

“நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.’’ இந்தப் பாடலின் பொருள்‘‘திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பிறப்பு இல்லாத உடம்பு பாழ். மனைவி இல்லாத மனை பாழ்’’ என்பதாகும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறக்க வேண்டும். அது நகரமோ கிராமமோ அல்லது ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த இடங்களில் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் ரயில்வே நிலையங்கள், மற்றும் கட்சிக் கூட்டங்கள் அனைத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பறக்க வேண்டும். ஒவ்வொரு ஊருக்குள் நுழையும் போதும் அந்த ஊரின் பெயர் பலகை இருக்கிறதோ இல்லையோ ..?பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறக்க வேண்டும்.

அதுவே நம் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் பெருமை. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறக்க விடப்படுவது மட்டும் நமது கடமை அல்ல..! அந்த இடத்தில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்..! எந்த எதிர்முனை சிந்தனைகளாலும் அவர்கள் பாதிக்கப்பட கூடாது. என்பதை மனதில் வைத்து அந்த கொடியை பறக்க விடும் போது அந்தப் பகுதியில் வாழும் மக்களின் துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் பாமக கொடியோடு சேர்த்தே தொண்டர்கள் பறக்கவிட்டிருக்க வேண்டும். “இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *