“பாஜகவில் இணைவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள்…. வேலூர் இப்ராஹிம் ஆவேசம்….!!!!.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் சார்பில் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தேசத்தில் உள்ள அனைத்து மதத்தையும் இணைத்து செயல்படக்கூடிய கட்சி தான் பாஜக. இதற்காக பிரதமர் மோடி அரசு பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் சிறுபான்மை இன மக்களின் கல்விக்காக மத்திய அரசு 5103 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றும் அமைப்பாக பிஎஃப்ஐ செயல்படுகிறது. இந்த பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணை போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பின்னடைவும் கிடையாது. முஸ்லிம் மக்கள் தற்போது பாஜகவுடன் இணைந்து வருகிறார்கள். பாஜகவில் இணைவதற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு காவல்துறையை வைத்து எங்களை நெருக்குகிறது.

பாஜக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை போடுகிறார்கள். இந்துக்களின் நம்பிக்கையை இழிவு படுத்தி பேசிய எம்பி ராசா மற்றும் எம்பி செந்தில்குமார் போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுத்து மத நம்பிக்கையை காயப்படுத்துகிறார்கள். இவர்களை ஜனநாயக ரீதியாக திருப்பி அடிக்கக்கூடிய வேலையை பாஜக செய்யும். வருகிற தேர்தலில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் பாஜக இடம் பிடிக்கும். மேலும் வருகிற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலாக மட்டுமின்றி தமிழக சட்டமன்ற தேர்தலாகவும் இருக்கும் என்று கூறினார்.